Friday, December 9, 2011

பதிவர்களின் நேர்மை

சில பதிவர்கள் பிரபல இதழ்களில் வரும் பரபரப்பான கட்டுரைகளை தமது வலைப்புக்களில் போட்டு தமக்கு நல்ல பிரபலம் தேடி குளிர்காய்ந்து வந்ததை அனைவரும் அறிவோம். சமீபத்தில் மணமான திரட்டி அவர்களை எச்சரித்து தற்காலிகமாக நீக்கியதாம். உடனே மடேரென மணத்தின் காலில் விழுந்தவர்கள் இன்னும் எழவே இல்லியாம். மணம் சொன்னதும் தங்கள் காப்பி பதிவுகளை நீக்கி முழுக்க பரிசுத்தம் ஆனார்கள்.

பின் மணத்தின் பின்புலத்தை அனுகி தங்கள் தரப்பு நியாயங்களை சொல்லி கெஞ்சினார்களாம். மணமும் இவர்கள் இல்லாமல் இருந்தால் தரவரிசை பட்டியல் களைகட்டாதே என்று மன்னித்து திரும்ப சேர்த்து கொண்டார்களாம். இப்போது மணத்திற்கு பயந்து பழையபடி தங்கள் காப்பி பதிவுகளை போடமுடியாமல் சொந்த பதிவு போடமுடியாமல் தவிக்கிறார்களாம். காப்பி பதிவுகள் போட இயலாமல்  கைகள் அரிகிறதாம். மீண்டும் மணம் தங்கள் பழைய வேலையை காட்ட அனுமதிக்குமா என்று மறைமுக செய்திக்காக காத்திருக்கிறார்களாம்.

இதற்கிடையே புரட்சி பதிவர் என்று ஒருவர் கிளம்பிவந்து அவர்கள் வண்டவாளங்களை கிழித்து கொண்டிருப்பதால் அவர்கள் மிகவும் கதிகலங்கிபோயிருக்கிறார்களாம். இவ்வளவு நாளும் தரவரிசை, ஹிட்ஸ் வாங்கி சேர்த்த பேரும் புகழும் இப்படி சேதமாகிறாதே என்று கடும் மன உளைச்சலில் இருக்கிறார்களாம். அந்த புரட்சி பதிவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியாத ஆதங்கத்தில் சந்தேகப்படுபவர்கள் மேல் எல்லாம் எதிர்பதிவு போட்டு கோபத்தை தணித்து கொள்கிறார்களாம். உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கிறான். வேறு என்ன?

பிரபல பத்திரிக்கைகளை காப்பியடித்து இவர்கள் வாங்கிய பிரபலத்திற்கு விலை என்ன? இவர்கள் பாட்டுக்கு எல்லாவற்றையும் அழித்து விட்டு பரிசுத்தமாகிவிடுவார்கள், அங்கே வந்து அருமை, நல்ல பகிர்வு என்று பின்னூட்டம் அளித்தவர்கள் ஓட்டு போட்டவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா? தங்கள் வலைப்பூக்களை அழித்து விட்டும் மீண்டும் புதிதாக ஒன்று துவங்கி தங்கள் நேர்மையை நிரூபிக்க முடியுமா?

Tuesday, November 8, 2011

மணியானவரின் புதிய அவதாரம்

ஏற்கனவே இரண்டாவது அவதாரம் எடுத்து பதிவுலகை முட்டாளாக்கி மகிழ்ந்த அந்த மணியான பதிவரை பற்றி முன்பே பார்த்திருந்தோம். பல பயங்கர ரணகளங்களுடனும் திடீர் திருப்பங்களுடனும் இரண்டாம் அவதாரம் இனிதே முடித்து வைக்கப்பட்டது. வழக்கமாக திடீர் என்று கானாமல் போய் புது அவதாரம் எடுக்கும் பழக்கம் உள்ள அந்த பதிவர், இப்போது காணாமல் போக போவதாக சொல்லி விட்டே சென்றார். ஆனால் அதற்கு முன்பாகவே தாம் வசிக்கும் தேசத்தின் பெயரில் ஒரு வலைபூ தொடங்கி ரகசியமாக பகுதி நேரமாக நடத்தி கொண்டிருந்தார்.

இப்போது அதை முழு நேரமாக நடத்த தொடங்கிவிட்டாராம். அவரது அனைத்து பதிவுகளுக்கு ஆஜராகும் அவரது நாட்டை சேர்ந்த குழுவும் அங்கே சென்று தங்கள் பணியை தொடங்கிவிட்டனராம். அனைவருக்கும் அந்த பிரெஞ்சுக்கார் தான் மணியானவர் என்றும் தெரியுமாம். இருந்தாலும் மணியானவரின் அன்பான வேண்டுகோளுக்கு இனங்க அதை காட்டி கொள்வதில்லையாம்.  அற்புதம் அற்புதம், எப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்பு இது?

புது வலைப்பூக்கள் ஆரம்பிப்பதும் பின்னர் அதை விட்டு விட்டு இப்படி பெயர் மாற்றி பெயர் மாற்றி வேறு வலைப்பூ ஆரம்பிப்பதும் எதற்கு என்று எமது சிற்றறிவிற்கு இதுவரை விளங்கவில்லை. இவர் ஏதோ ஒரு வில்லங்கமான வேலையை செய்து வருகிறாரோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. எதையும் செய்து தொலையட்டும். அதை பற்றி நமக்கேன் அக்கரை என்று கேட்கிறீர்கள் தானே? என்ன செய்வது ஒவ்வொரு முறையும் இது யாரோ புது பதிவர் என்று எண்ணி, அவர் பின்னூட்டம், வாக்குகள் நமக்கும் கிடைக்கும் என்று எண்ணி அவரை பாராட்டி மகிழும் அப்பாவி பதிவர்களை எண்ணித்தான் நாம் இதுபோன்ற விடயங்களை வெளியிட வேண்டி இருக்கிறது.

பொறுத்திருந்து பாருங்கள். மணியானவர் எப்படியும் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லையே என்று வெளியே வருவார். ஆனால் கையும் களவுமாக மாட்டினாலும் வெட்கமே படாமல் இன்னொரு வலைப்பூ ஆரம்பிப்பார். அதற்கும் போய் ஆகா, அருமை, சூப்பர், கலக்கல் என்று பின்னூட்டமிட்டு மகிழ்வோம் நண்பர்களே.....

Monday, October 3, 2011

பிரபல பதிவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்

நேற்று தமிழ்மணம் வாராந்திர ரேங்கை வெளியிட்டு விட்டது. அது வழக்கம்தான் என்றாலும், பட்டியலில் வழக்கத்திர்கு மாறான அதிர்ச்சி நிறைய காத்திருந்தது. நீண்ட நெடுங்காலமாக முதலிடத்தில் இருந்து வந்தவர் இருந்த இடமே தெரியாமல் போனது. இன்னும் வேறு சிலரும் காணவில்லை. அவர்கள் அனைவரும் பத்திரிக்கைகளை காப்பியடிது பதிவிட்டதே அதற்கு காரணம் என்று சொல்ல படுகிரது. தமிழ்மணமும் இதுபோன்ற பதிவுகள் திரட்டியில் இருந்து நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இந்த பதிவர்கள் தரவரிசையில் இருந்து மட்டுமல்ல, தமிழ்மணத்தில் இருந்தே தூக்க பட்டு விட்டார்கள். தமிழ்மணத்தில் அவர்கள் பதிவுகளை இரண்டு நாளாக காணமுடியவில்லை.

இந்த தரவரிசையிலும் கூட இன்னும் 2-3 காப்பியடிக்கும் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் ஏன் தமிழ்மணம் கண்டுகொள்ளவில்லை என தெரியவில்லை. இனி வரும் வாரங்களில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆனால் அவர்களும் அரண்டு போய் இருப்பதாக தெரிகிறது. தமிழ்மணத்தில் இருந்து விலக்க பட்ட பதிவர்கள் இனி என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இனி அவர்கள் வலைப்பூக்கள் காத்தாடுமா? இல்லை தொடர்ந்து பிரபலமாக வலம் வருவார்களா? முதலிடத்தில் இருந்த பதிவர் தமிழ்மணம் இல்லாவிட்டாலும் தப்பிவிடுவார். அதே அளவு வாசகர் வருகையை பெறுவார் என்று தோனுகிறது. ஆனால் அவர் போலவே காப்பியடித்து மாட்டி கொண்ட மற்ற பதிவர்கள் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. தேறுவார்களா என்பது சந்தேகமே. இதுதான் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை என்பதோ.

இப்போது உள்ள தரவரிசைக்கு வருவோம், இதுவும் தினமும் பதிவு எழுதுபவர்கள் அடங்கிய பட்டியலாகவே இருக்கிறது. எனவே இந்த பட்டியலில் இடம் பெற வேண்டுமானால், அதிகம் எழுதுங்கள். தரமெல்லாம் பின்னர் பார்த்து கொள்ளலாம். அதிகம் எழுதுங்கள், அதிகம் பேருக்கு வாக்களியுங்கள், பின்னூட்டமிடுங்கள். அதுவே தரவரிசையை பிடிக்கும் தராக மந்திரம். புதியவர்களே தளராமல் முயற்சியுங்கள், நாம் சொன்ன வழியை கடைப்பிடியுங்கள் வெற்றி நிச்சயம்.

Sunday, September 25, 2011

இந்தவார டாப் 10 பதிவர்கள் ஒரு பார்வை

தமிழ்மணம் தனது வாராந்திர வரிசை பட்டியலை வழக்கம் போல் வெளியிட்டு விட்டது. அதிக மாற்றமில்லை. ஐடியாமணி என்ற பதிவர்  முன்னேறி 6-ல் இருந்து 2-க்கு தாவி இருக்கிறார்.  புதிய பதிவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் தமிழ்மணத்தில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பதிவர்கலை பற்றி வரிசையாக
பார்ப்போம். வலைப்பூவின் பெயருக்கு அருகே, கடந்த வாரத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவுகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.


1. அட்ராசக்க : 13 பதிவுகள்
இவர் தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு பதிவுகள் இடுகிறார். சினிமா, நகைச்சுவை, பத்திரிக்கை கட்டுரைகள் என்று பதிவிடுகிறார். ஆரம்பத்தில் சற்று தூக்கலான கவர்ச்சி கலந்து எழுதியவர் சற்று குறைத்திருக்கிறார். ஆனால் படங்களில் இன்னும் கவர்ச்சி அலைதான்.

2. ஐடியாமணி: 10 பதிவுகள்
பழைய, புதிய பதிவர். இவரும் சராசரியாக இரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் பதிவுகள் போடுகிறார். இவரது பதிவுகளை நோக்கையில் இவர் ஒரு இலங்கையை சேர்ந்த ஐரோப்பாவில் வாழும் பதிவர் என்று தெரிகிறது. நடிகைகள் பற்றியும், கவர்ச்சியாகவும் எழுதுவார், சாமர்த்தியமாக இடையே ஈழம் பற்றிய பதிவுகளையும் போடுவார். அதிரடியாக பிடித்த 2-ம் இடத்தை தக்க வைத்து கொள்ள கடும் கவர்ச்சியில் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

3. வேடந்தாங்கல் கருன்: 14 பதிவுகள்
தினமும் இரு பதிவுகள். சற்றே தூக்கலான கவர்ச்சி நெடி, அதிரடி தலைப்புகள். ஆனால் அதுவே இவருக்கு ஹிட்ஸ் பெற்று தரும் ஆயுதம். பல தரப்பட்ட பதிவுகலை எழுதுகிறார். சில நேரம் நல்ல பதிவுகளும் வருவதுண்டு.

4. விக்கி உலகம்: 14 பதிவுகள்
தினமும் இரு பதிவுகள், சுருக்கமாக இருக்கும். சாதாரணமான பதிவுகள் தான். வியட்நாம் அனுபவங்களால் அறியபடுபவர். சாடைமாடையாக பதிவுகள் போட்டு அனைவரையும் குழப்பமடைய செய்வார்.

5. நாஞ்சில் மனோ: 12 பதிவுகள்
குறிப்பிட்ட வரையறைக்குள் வராதவர். சராசரியாக தினம் இரு பதிவுகள்.  தமிழ்மணத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளுக்கும் கருத்துரையும் வாக்கும் அளிப்பவர். அனைவருக்கும் நண்பர். அதனால் தனக்கும் ஹிட்ஸ் தேடி கொள்வவர்.

6. தமிழ்வாசி : 11 பதிவுகள்
சுருக்கமான பதிவுகள். முன்பு வீடியோக்கள் மட்டும் பகிர்வார், இப்போது சிறுது எழுதவும் செய்கிறார். இவரும் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் பதிவிடும் வழமை உள்ளவர், தலைப்புகளில் விளையாடுவார். தொழிநுட்ப பதிவும் எழுதுவார்.

7. கவிதைவீதி சௌந்தர் : 7 பதிவுகள்
ஒரு நாளைக்கு ஒரு பதிவு. கவிஞர், ஆனால் சினிமா அரசியல் என்று சுற்றி வருவார். அதிரடி தலைப்புகள் வைப்பார். பதிவர்களை பற்றி கிசு கிசு என்று அவர்களை பற்றி தன் மனதில் உள்ளதை கொட்டிய துணிச்சல்காரர்.

8. கூடல்பாலா: 6 பதிவுகள்
கூடங்குளம் போராட்டத்தின் மூலமாக பரவால அறிய பட்டவர். வழமையாக கணிணி/தொழிநுட்பம் சம்பந்தமாக எழுதுவார். போராட்டம் தீவிரமடந்ததும் அது மட்டுமே எழுதி வருகிறார்.

9. counsel for any : 5 பதிவுகள்
இந்த தரவரிசையில் நிஜமாகவே தரமாக எழுதி வருபவர். பெரும்பாலான பதிவுகள் பிரதி எடுத்து வைத்து படிக்க தக்கவை. மருத்துவம், உணவு சம்பந்த பட்ட பதிவுகள் அதிகமாக எழுதுவார்.

10. வந்தேமாதரம் : 10 பதிவுகள்
முழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றி எழுதுபவர். ப்ளாகர், இணையம், என்று அனைத்து வகை பயன்பாடுகளுக்கும் இவரிடம் பதிவு உண்டு. இவர் பதிவை பயன்படுத்தாத தமிழ் பதிவரே இருக்க மாட்டார்.



இதை பார்த்து உங்களுக்கும் இப்பட்டியலில் இடம் பிடிக்கும் ஆசை வந்துவிட்டதா?

அப்படியென்றால் நீங்கள் செய்ய வேண்டியது,

1. தினமும் குறைந்தது 2 பதிவுகள்
2. அதிரடி, கவர்ச்சி தலைப்புகள்
3. முடிந்த வரை அனைத்து பதிவுகளுக்கும் கருத்துரை, வாக்குகள்

தரவரிசையில் இடம் கிடைத்ததும் இனி உங்கள் வழமை போல் பதிவிட துவங்கலாம். தரவரிசை இறங்க துவங்கினால் நடுவில் கவர்ச்சியை கையில் எடுத்து ஏற்றி கொள்ளலாம்.

பிரபல பதிவர்கள்களாக அறியபட்ட உண்மைத்தமிழன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், மாதவராஜ் போன்றோர் தரவரிசையில் 20-க்குள் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, September 19, 2011

கூடங்குளம் போராட்டத்தின் நோக்கம் சரியானதுதானா?

பதிவர் கூடல் பாலா அவர்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே கலந்து வருவதுடன், அதுகுறித்த விழிப்புணர்வு பதிவுகளும் வெளியிட்டு வருகிறார். தற்போது உண்ணாவிரதமும் இருந்துவரும்  அவரை பாராட்டும் இன்னேரத்தில் போராட்டத்திற்கான காரணங்களாய் அவர் குறிப்பிட்டிருந்தவற்றில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அனைவர் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன். இது குறித்து உணர்ச்சிவயப்பட்டு எதிர்குரல் எழுப்பாமல், சிந்தித்து செயல்பட்டால் மகிழ்வேன்.
 
 
1) கூடங்குளம் அணு உலையானது மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது .பொதுவாக இது போன்ற பெரிய அணு உலைகள் அமையும் பகுதியிலிருந்து 16  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மிகக் குறைவான மக்கள் தொகையே இருக்கவேண்டும்.மாறாக இங்கு 16 கிலோ மீட்டருக்குள் 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .அணு உலை நல்ல நிலையில்  இயங்கினால்கூட இவர்களுக்கு பல்வேறு குணமாக்க முடியாத நோய்கள் ஏற்படும் .
 
 
கூடங்குளம் அணு மின் திட்டம் 20 வருடங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாக பணி நடந்து வருகிறது.  அப்போதெல்லாம் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இப்படி போராடுவது சரியா? கல்பாக்கத்தில் மக்கள் இல்லையா?

 
2 ) சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்ததைப் போலொரு விபத்து கூடங்குளத்தில் நிகழுமாயின் அணு உலையைச்சுற்றி 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் 10  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 24  மணி நேரத்திற்குள் வெளியேற்றப் படவேண்டும் .இது முற்றிலும் சாத்தியமில்லாதது.
 
 
இதற்கு அரசுதான் ஏற்பாடுகள் செய்யவேண்டும். போராட்டங்கள் மூலம் சரியான ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தலாம். ஜப்பானில் எப்படி சாத்தியமானது? மற்ற நாடுகள் என்ன செய்திருக்கின்றன? நம் நாட்டிலேயே மற்ற அணு உலைகளில் என்ன ஏற்பாடு வைத்திருக்கிறார்கள்?
 
3)முக்கியமான இன்னொரு காரணம் தரமற்ற கட்டுமானம் .இதைப் பற்றி விளக்கமாக அறிய கூடங்குளம் அணு உலை பில்டிங் வீக் என்ற இப்பதிவை வாசிக்கவும் .
 
 
தரமற்ற கட்டுமானம் என்று நாம் சொல்வது ஆதாரமற்றது. அதுகுறித்த புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை எதுவும் இருந்தால் சொல்லுங்கள். இந்தியாவிலேயே கட்டபட்ட கல்பாக்கம் அணு உலைகள் செம்மையாக இயங்கி வருகின்றன.
 

4) உக்ரைனின் செர்நோபில் விபத்து போல விபத்து நிகழுமாயின் தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழினமே அழியும் . 


இது உலகத்தில் உள்ள, இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளுக்கும் பொருந்துமே?


5) அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கலந்த நீர் கடலில் கலக்கப் படுவதால் கடல் வளங்கள் அழியும் .
 
இதுவும் பொதுவான காரணம்தான்.
6) அணு உலையின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மண்ணுக்கடியில் புதைக்கப் படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் .மேலும் இவற்றை 24000  ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க படவேண்டும் .
 
பொதுவான காரணம்.
7 ) அணு உலைகள் கடற்கரையில் கடல்மட்டத்திலிருந்து வெறும் 7  மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளதால் எளிதில் சுனாமி தாக்கும் ஆபத்து உள்ளது .சமீபத்தில் ஃபுகுஷிமா அணு உலைகளை 20  மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத் தக்கது .
 
கல்பாக்கம் அணு உலை சுனாமியை தாங்கி நின்றது நினைவிருக்கலாம். மேலும் அப்போது தென் தமிழக கடற்கரை பகுதியை சுனாமி தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8 )தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளுக்கு முக்கிய இலக்கு அணு உலைகள். இலங்கையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது .

இதுவும் பொதுவான காரணமே.



ஆக  கூடங்குளம் அணு உலையை மூட சொல்வதற்கு சரியான காரணங்கள் ஏதுவும் இல்லை, தரமற்ற கட்டுமானம் என்பதை தவிர (அதுவும் நிருபிக்கப்படதா தகவலே). போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணு உலைதான் நாட்டின் முதல் அணு மின்நிலைய போல நடந்துகொள்வது சரியல்ல.

அணு உலைகளோ, ஆயுதங்களோ வேண்டாம் என்பதே எமது கருத்து. நாட்டில் இருக்கு்ம் அனைத்து அணு உலைகளுக்கும் போதிய தற்காப்பு நடவடிக்கைகள், ஆய்வுகள், அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ள படவேண்டும். படிப்படியாக அணு உலைகளின் பயன்பாட்டை குறைத்து, அறவே இல்லாமல் ஆக்க வேண்டும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து தொடங்குவதற்கு தயாராக இருக்கும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சொல்வது தவறானது. சாத்தியமற்றது.

சரியா தவறா, காரணங்கள் என்ன என்று எதையும் சிந்திக்காமல் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்பட்டு கூக்குரலிடுவதே நமது குணமாகி வருகிறது. பண்பட்ட முதிர்ச்சியான சமுதாயமாக நாம் மாறுவதற்கு இன்னும் பல நூற்றாண்டுகளாகும் போலிருக்கிறது.

Sunday, September 18, 2011

கூடங்குளம் போராட்டதிற்கு பின்னால் இருக்கும் அரசியல்


இருபது ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக உற்பத்தியை துவங்க உள்ள நிலையில், திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில், போராட்டத்திற்கு பின், அரசியல் பின்னணியும் உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் முன்பு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, ஒரு வழியாக வி.வி.இ.ஆர்.,-1000 என்ற தொழில்நுட்பத்துடன், பணிகள் துவங்கப்பட்டன.இந்திய அணுமின் கழகத்தின், 16 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் திட்டங்கள் துவங்கின. இரண்டு யூனிட்களில், தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. கடந்த 2001ல், அணு நிலைய கட்டுமான பணிகள் துவங்கி, 2007ல் முடிந்தன. பின், தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, 2007ல் கொதிகலன் நிறுவப்பட்டது. அணு மின் உற்பத்திக்கான கருவிகள், 2008ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.


அடுத்த மாதம் உற்பத்தி துவக்கம்: தற்போது, கட்டுமான பணிகள், கருவிகள் பொருத்துதல் என, அனைத்தும் முடிந்து, முதல் யூனிட்டில் மின் உற்பத்தி செய்வதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல், ஒரு யூனிட்டிலும், அடுத்த ஆண்டில், இரண்டாம் யூனிட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக, கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இங்குள்ள மக்களும், அரசியல்வாதிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த போராட்டத்தில், உள்ளூரை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள், மூன்று கன்னியாஸ்திரிகள், 20 பெண்கள் உட்பட 127 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னையில், மாநில அரசு உடனடியாக தலையிட வேண்டுமென, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.


எதிர்ப்பின் பின்னணி என்ன?கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த கட்டுமான திட்டத்திற்கு, திடீரென எதிர்ப்பு கிளம்பியது ஏன்? என்ற கேள்வி, அனைவருக்கும் எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக போராட்டம் நடப்பதாக, அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளும், உள்ளூர் பிரமுகர்கள் சிலரும், போராட்டத்திற்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்து வருகின்றனர்.நாட்டின் வளர்ச்சி பெரிதா? அல்லது நாட்டு மக்களின் பாதுகாப்பு பெரிதா? என்றால், முதலில் மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம். எனவே, மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், கூடங்குளம் அணு மின்நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. "ஒரே நேரத்தில், எந்த சுற்றுச்சூழல் சீர்கேடும் இல்லாமல், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உகந்த திட்டம்' என, கூறப்படுகிறது. புதிய கூடங்குளம் அணு மின்நிலையத்தால், மக்களுக்கோ, சுற்றுப்புறத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை' என, அணுமின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட திட்டம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, வெளிநாட்டு அதிபர்கள் பேசி, தொழில்நுட்பம் பறிமாறி, கட்டுமான பணிகள் மேற்கொண்ட பின், வளர்ச்சியை எட்ட வேண்டிய நேரத்தில், ஏன் இந்த திட்டம் என்ற போராட்டங்கள் வெடித்துள்ளன.


இன்றைய சிக்கலான பொருளாதார நிலையில், 16ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு என்பது மிக சாதாரணமானதல்ல. இந்த முதலீட்டையும், நாட்டு வளர்ச்சியின் முக்கிய நடவடிக்கையையும், ஒட்டுமொத்தமாக அரசியல் பின்னணி சீர்குலைக்கிறதோ என்று, நடுநிலையாளர்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்களிடம் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி விட்டு, போராட்டங்கள் நடப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது. இதில், எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல், சில அரசியல் கட்சிகள் போராட்ட பின்னணிக்குள் நுழைந்து, அரசியல் லாபம் தேடுவது திட்டவட்டமாக தெரிகிறது.அரசியல்வாதிகள் நுழைந்ததால், இதுவரை மக்களின் உயிர்பாதுகாப்பு தொடர்பான போராட்டமானது, நடுநிலையை கடந்து, தற்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, நெருக்கடி தரும் அரசியல் போராட்டமாக மாறியுள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனால், இதுவரை நடந்த போராட்டத்தின் நோக்கமும், நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.


கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்தில்லை : திட்ட இயக்குனர் விளக்கம்:ஆபத்து... ஆபத்து என்று, அச்சத்துடன் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. இப்படி, மக்கள் அச்சப்படும் அளவுக்கு, இங்கு ஆபத்து உள்ளதா என்பது குறித்து, கூடங்குளம் அணு மின்நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜியிடம் கேட்டபோது, கூறியதாவது:கூடங்குளம் அணு மின்நிலையம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன், ஒப்பந்தம் செய்யப்பட்டு, பார்த்து, பார்த்து, உருவாக்கப்பட்ட திட்டம். இதற்காக நில எடுப்பு செய்தபோதும், கட்டுமான பணிகள் துவங்கியபோதும், பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களுடன், கிராம மக்கள் மற்றும் அமைப்புகளை அழைத்து, பொது கருத்து கேட்பு மற்றும் விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.இதில், அனைவரின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தோம். உலகில் எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அடங்கிய மிகப்பெரிய பாதுகாப்பு திட்டத்தை தயாரித்து, அதன்படி கூடங்குளம் மின்நிலையத்தில் செயல்படுத்தியுள்ளோம்.எப்படியெல்லாம் விபத்து நடக்கலாம் என, பல கோணங்களில் சிந்தித்து, எந்த நிகழ்வானாலும், கதிர்வீச்சோ, கட்டடத்திற்கு பாதிப்போ, சுற்றுப்புற ஊர்களுக்கு சிக்கலோ ஏற்படாத அளவுக்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.இத்திட்டத்தால், கடல் வாழ் உயிரினங்களுக்கோ, மீன்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. கடலுக்கும், அணுமின் திட்டத்திற்கோ தொடர்பில்லை. மீன்வளத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதனால் தான் மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, கடல் பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை சான்றிதழ் தந்துள்ளன.அணு உலையை ஒட்டிய கடற் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை இல்லை. அணு உலை பாதுகாப்புக்காக, அதன் கட்டடத்தில் இருந்து, 500 மீட்டர் தூரம் மட்டுமே பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கூட மீன் மற்றும் கடல்வாழ் உயிரின நடமாட்டம் உண்டு.இந்த திட்டம் மிகசிறந்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டதால், கிராம மக்கள் மிக நிம்மதியாக வாழமுடியும். சுற்றுச்சூழல் பிரச்னையோ, அணுக்கழிவோ ஏற்படாது. இத்திட்டம் வந்தால், கூடங்குளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் பெரியஅளவில் வளர்ச்சியடையும். கதிர்வீச்சு போன்ற ஆபத்துகள் இல்லாத உயர்ந்த தரம் கொண்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட திட்டம், என்பதால் இதை மற்ற நாடுகளும் கடைபிடிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


பாதிப்பில்லாத விபத்துகள் : அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி, கடல்சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நிலநடுக்கம், பயங்கரவாத தாக்குதல், தொழில்நுட்ப செயலிழப்பு, தீ விபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதை கருத்தில் கொண்டுதான், அணு மின்நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. சென்னை கல்பாக்கம் அணுமின்நிலையம் இருந்த பகுதியில், 2004ல் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. ஆனால், தானாக செயலிழக்கும் கருவிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், 1993ல் உத்தரப்பிரதேசம் நரோரா அணுமின் நிலையத்தில், கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது. இதிலும், எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படவில்லை. குஜராத் காக்ராபர் அணுமின்நிலையத்தில், 1994ல் வெள்ள தாக்குதல் ஏற்பட்டது. இதிலும், கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு இந்திய அணுமின் நிலையங்கள் மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி பயன்பாட்டை பொறுத்தவரை, இந்திய தொழில்நுட்பம், உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.


தமிழக மின்பற்றாக்குறையை தீர்க்கும் கூடங்குளம் : கூடங்குளம் அணு மின் நிலையம் வந்தால், தமிழகத்திற்கு என்ன பயன் என்பது குறித்து, தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:தமிழகத்திற்கு, 3,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. மின்பற்றாக்குறையால், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தமும், வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளன. இதை சரிசெய்ய மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள், மின் வெட்டை நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய மின்திட்டங்கள் இயங்குவதன் மூலம், கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என, தமிழக மின்துறை கணித்துள்ளது.மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தர, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வேண்டுமென்றால், புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.


இதில், கூடங்குளம் அணு மின்நிலையமும் ஒன்று. அனைத்து பணிகளும் முடிந்து, அடுத்த மாதத்தில் உற்பத்தி துவங்கும் நிலையில், தமிழக மின்துறைக்கு, முதற்கட்டமாக 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அடுத்த ஆண்டில், கூடுதலாக 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் மட்டும், தமிழக மின்பற்றாக்குறையில், 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.ஆனால், திட்டமிட்டு சிலர் திட்டங்களை முடக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு : கடந்த மார்ச் மாதம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடித்து சிதறியதையடுத்து, உலகம் முழுவதும் அனைத்து அணு உலைகளுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ள, அனைத்து நாடுகளும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்(ஏ.இ.ஆர்.பி.,) கடந்த சில தினங்களுக்கு முன், மத்திய அரசிடம் தனது வழிகாட்டுதல் அறிக்கையை அளித்துள்ளது. இது, இந்திய அணுசக்தி மின்கழகத்தின் மூலம், அனைத்து அணு மின்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:இந்தியாவிலுள்ள, 20 அணு மின்நிலையங்களில், இயக்கத்தில் உள்ள 18 நிலையங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இதில், பழமையான மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம் மற்றும் கடலை ஒட்டி இருக்கும் கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகியவற்றிற்கு, கூடுதல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.கடந்த, 2004ல் சுனாமி ஏற்பட்ட பின், கல்பாக்கம் அணு மின்நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில், கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையத்தில் உள்ள வெப்பமூட்டும்"ரியாக்டர்' உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இது, நிலநடுக்கம் மற்றும் சுனாமி அபாயம் உள்ள சுமத்ரா தீவில் ஏற்படும் மாற்றங்களால், பாதிக்கப்படும் பகுதி என்பதால், கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மற்ற அணு உலைகளுக்கு எந்த விதமான பாதிப்புகளுக்கும் வாய்ப்பில்லை.


இந்திய அணு உலைகள், கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியிலிருந்து, மேற்கு கடல் பகுதியில் 800 கிலோமீட்டர் தூரத்திலும், கிழக்கு கடல் பகுதியிலிருந்து, 1,300 கிலோமீட்டர் தூரத்திலும், அமைந்துள்ளதால், சுனாமி அபாயம் இல்லை. எனவே, ஜப்பானை போன்ற நிலை இங்கு ஏற்படாது.ஆனாலும், ஆய்வு மதிப்பீடுகளை தாண்டி, இயற்கை பேரிடர் ஏற்பட்டால், சமாளிக்ககூடிய வகையில், அணு உலைகளின் கட்டடங்கள், அமைப்புகள், குளிர்விப்பான், வெப்பமூட்டும் கருவி, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை உயர்தரமான ஆய்வு செய்து அமைக்க வேண்டும். கடலுக்கருகில் வைக்கப்படும் குளிர்விப்பான்களை பாதுகாக்க வேண்டும்.தற்போதைய நிலையில், இந்திய அணு உலைகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. அவற்றால் தீங்கு ஏற்படாத தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் ஏற்பாடுகள் செய்து, சர்வதேச அளவில், உச்சபட்ச கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக, இந்திய அணு உலைகள் செயல்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நிலநடுக்கம், சுனாமியையும் சமாளிக்கும் :


இந்திய அணுமின் சக்தி கழகம் மற்றும் அணுமின் ஒழுங்குமுறை வாரியம் வெளியிட்ட தகவல்கள்:ரிக்டர் அளவில், 6.7க்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்திய அணு உலைகள், தானாகவே செயலிழக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த நிலையிலும், கதிர்வீச்சு வெளியேறாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடல் மட்டம் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்தால், நிலையம் தானாகவே செயலிழக்கும். இயற்கை பேரிடர் நேரத்தில், பேட்டரி மூலம் கண்காணித்து இயக்கும், நவீன தொழில்நுட்ப கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.அணு உலையை சுற்றி, பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. கல்பாக்கத்தில், 14 மீட்டருக்கு மேல் கடல்மட்டம் உயர்ந்தால், தானாக நிலையம் செயலிழக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கதிர்வீச்சு வெளியே வராத அளவுக்கு "ரியாக்டர்கள்' பல அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து, பிரான்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்கு பின், அதுபோன்ற நிலை ஏற்பட்டாலும், அதற்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர, இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள எந்த பகுதியிலோ, அல்லது அதனால் விளைவுகள் ஏற்படும் பகுதியிலோ, இந்திய அணு மின்நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்

Thursday, September 15, 2011

கூடங்குளம் அணுமின்நிலையமும் பொறுப்பற்ற மக்களும்

நமது நாட்டில் மின்சார பற்றாக்குறை தொடர்ந்து அதிகமாகி கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. மின்சார உற்பத்திக்கு பல்வேறு முறைகள் இருக்கின்றன. வேறு வழி இல்லாமல்தான் அணுமின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்துள்ளது. மின்சார பற்றாக்குறை வருடா வருடம் உயர்ந்துகொண்டே வரும் நிலையில் அரசு எல்லா சாத்திய கூறுகளையும் பார்க்க வேண்டி உள்ளது.

நம் நாட்டில் மற்ற மின்சார உற்பத்தி முறைகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஏராளமான இடங்களில் எரிவாயு, அனல் மின்சார உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டுதான் வருகின்றன. ஆனால் அதுவும் போதாத நிலை. அந்த அளவுக்கு தேவை அதிகரித்து வருகிறது. எனவே அதன் பகுதியாக அணுமின்சார நிலையங்களும் தொடங்கப்டுகின்றன.

கூடங்குளம் திட்டம் 1988 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு பல தாமதங்களுக்கு பின் தொடங்கப்பட்ட போது மகிழ்ச்சியோடு ஆதரவளித்தவர்கள், இத்தனை ஆண்டுகள் ஆனபின்பு இப்போது வேண்டவே வேண்டாம் என்று எதிர்க்கிறார்கள். அணுமின் நிலையம் ஆபத்தானதாம். ஜப்பான் சுனாமியால் நடந்தவற்றை பார்த்தவுடன் எல்லாருக்குமெ அணு உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பயம் வந்து விட்டது. ஜப்பானாலேயே செய்ய முடியாத பாதுகாப்பை நாம் சரியாக செய்துவிடுவோமா என்ற பயம் தான்.

இது நியாயமாக இருந்தால் கல்பாக்கம் மக்களும் போராட்டம் செய்ய வேண்டும் அல்லவா? கல்பாக்கத்தையும் நிறுத்தி விட்டால் 1000 மெகாவாட் பற்றாக்குறை வந்துவிடும். அப்புறம் எல்லாரும் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கனும். தயாரா? அந்த மின்சாரத்தை மட்டும் சுகமாக அனுபவித்து கொண்டு இப்போ கூடங்குளத்தை மட்டும் எதிர்க்கிறீங்களே ஏன்? நீங்கள் மட்டும் என்ன அவ்வளவு புத்திசாலிகளோ? மூடு என்றவுடன் மூடிவிட்டு போக அது என்ன நேற்று ஆரம்பிக்க பட்ட பொட்டிக்கடையா? 10000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் செலவு செய்யப்பட்டு 20 வருடங்களாக கஷ்டப்பட்டு செய்துமுடிக்க பட்ட அணு உலை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது. மக்களும் இறங்கி வரவேண்டும். பின்னால் இருந்து தூண்டிவிடுபவர்கள் யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, September 12, 2011

இரு பதிவர்கள் அடிக்கும் கள்ளக்கூத்து

சிறிது காலத்திற்கு முன்னாள் தலைகீழாக யோசிக்க கூடிய அந்த பதிவர், தானுண்டு தன் வேலையுண்டு என்று ஏதோ பதிவுகள் போட்டு காலத்தை கடத்தி கொண்டு இருந்தார். அப்புறம் எங்கிருந்தோ அவருக்கு யோகம் அடித்து திடீர் பிரபலம் ஆனார். அல்லது ஆக்கப்பட்டார்.

தனது திடீர் பிரபலத்தை நன்கு பயன்படுத்தி மொக்கைகளாக போட்டு மகிழ்ந்தார். இடை இடையே தங்கள் ஊரை பற்றி (தங்கி இருக்கும் ஊர் அல்ல) கடுமையான அரசியல் பதிவுகள் வேறு. அப்புறம் என்ன நினைத்தாரோ அந்த வலைப்பூவை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு வலைப்பூ ஆரம்பித்தார். ஏன் எதுக்கு என்று யாருக்கும் சொல்லவில்லை. அது அவர் இஷ்டம். மறுபடியும் தனது பாணியில் இரண்டு மொக்கை இரண்டு அரசியல் என்று தொடர்ந்தார். பல பிரபல, சாதா பதிவர்களை சாட்டில் தொடர்பு கொள்வது போனில் தொடர்பு கொள்வது என தொந்தரவு செய்து அவர்கள் விபரங்களை சேகரித்துக் கொண்டார். எதற்கு என்று தெரியவில்லை.

இப்படி படுவேகமாக தனது மொக்கை மற்றும் அரசியல் பதிவு சேவையில் சென்று கொண்டிருந்தவர், திடீரென காணாமல் போனார். இரு மாதங்களுக்கு மேலாகியும் அவர் திரும்பி வந்தபாடில்லை. ஒரு நாளுக்கு இரண்டு பதிவுகள் போட்டு நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகள், இண்ட்லியில் அனைத்து பதிவுகளுக்கும் ஓட்டு என்று பிசியாக வாழ்ந்தவர், திடீரென மறைந்து கொண்ட மர்மம் என்ன?

அப்புறம் திடீரென யோசனை பெல் என்று ஒரு பதிவர் முளைத்தார். முதல் பதிவிலேயே இவர் யார் என்று அனைவரையும் சந்தேகப்பட வைத்தார். தொடர்ந்து பதிவுகள் எழுத எழுத, பெரும்பாலான பதிவர்கள் அவர் யாரென விளங்கி கொண்டனர். ஆனால் அது தெரியாமல் இன்னும் அவர் தன் நடிப்பை தொடர்ந்து வருகிறார், இதற்கு அவர் நண்பர் ஒருவரும் கூட்டு என்று கூறுகிறார்கள். அவர்கள் யார், எதற்காக இந்த கள்ளத்தனம் செய்கிறார்கள் என்று வெகுவிரைவில் தெரியவரும். அதுவ்றை அனைவரும் அமைதியாக நடப்பதை கவனித்து கொண்டிருக்குமாறு வேண்டுகிறேன்.


டிஸ்கி 1: மேலே சொல்லப்பட்டவை யாவும் கற்பனையே. யாரும் தங்களை அந்த பாத்திரங்களில் பொருத்தி பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள படுகிரார்கள்

டிஸ்கி 2: இந்த பதிவை தவறாக புரிந்து கொண்டு சம்பந்தமில்லாதவர்கள் இங்கே வந்து பொங்க வேன்டாம்

டிஸ்கி 3: யார் வந்து பொங்கினாலும் பதில் சொல்ல படமாட்டாது, காரணம் டிஸ்கி 1 ஐ படிக்கவும்

டிஸ்கி 4: அவர்கள் யார் என்று தெரிந்தவர்கள் புரிந்து கொண்டவர்கள் தயவு செய்து இங்கே கமெண்ட்டில் அதை போட்டு அசிங்க படுத்த வேண்டாம்

டிஸ்கி 5: இங்கு அனைவருடைய ஐபி நம்பர்களும் கண்கானிக்க படுகிறது. எனவே நீங்கள் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக உக்கார்ந்து இருந்தாலும் கண்டுபிடித்து அட்ரசுடன் அம்பல படுத்தப்படும்.

டிஸ்கி 6: மைனஸ் ஓட்டு போடுபவர்கள் காவல் துறையிடம் ஒப்படைக்க படுவார்கள்.


Monday, March 14, 2011

இது நியாயமா பதிவர்களே?

கொஞ்ச நாட்களாக பதிவரசியல் அனைவரையும் பிடித்து ஆட்டி வருகிறது.  சொந்த விருப்பு வெறுப்புகள், பொறாமை, ஈகோ பிரச்சனைகளாலேயே இந்த அரசியலின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்பது மிகவும் வருத்தப் படக்கூடிய விஷயம்.

"சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..அவர்கள் சாதாரணமாக உப்புமா பதிவு,ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகள் போட்டு கட்டுரை எழுதி கவிதை என எழுதி சாதாரணமாக 20 ஓட்டு வாங்கி விடுவார்கள்..அப்போதான் அதே குழுவில் இருக்கும் இன்னொருவர் போடும் உப்புமா கவிதைக்கு இவர் ஓட்டு போடுவார்....சில பதிவர்கள் சாட்டில் வந்து தங்கள் இடுகை முகவரி கொடுத்து படிக்க சொல்வது வழக்கம்..அதுபோலத்தான் நானும் செய்தேன்..உடனே கமெண்ட் போடு ...ஓட்டு போடு..என வற்புறுத்துகிறார் என்னை சித்ரவதை செய்கிறார் என ஒரு பதிவர் புரளியை கிளப்பி விட்டுவிட்டார்...அட போ..நீயும் என்னை சாட்டில் வந்து ஓட்டு கேட்டவன் தானே...இப்படி பொய் பேசுகிறானே என நினைத்துக்கொண்டு இனி திரட்டியில் இணைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்....இது மோசமான அரசியலாக இருக்கிறது.."

சமீபத்தில் இதை ஒரு பதிவில் பார்த்தேன். அது எங்கே என்று பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள், தெரியாதவர்களுக்கு அது வேண்டாம். தேவையில்லை.

குழு, குழு என்கிறாரே இன்று யார்தான் குழுவாக இல்லை? பதிவு எழுத ஆரம்பித்து ஆறு மாதத்திற்கு மேல் உள்ள அனைவருமே ஒரு குழுவிலோ அல்லது தனக்கென உள்ள ஒரு நட்பு வட்டதிலோ தான் இருக்கிறார்கள்.  பெரும்பாலான பதிவர்களின் வேறு வேறு பதிவுகளை உற்று நோக்கிப் பாருங்கள், ஆயிரமாயிரம் ஹிட்டுக்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சிலரே எல்லா பதிவுகளுக்கும் வந்து கமென்ட் போடுகிறார்கள், ஓட்டுப் போடுகிறார்கள் என்பது புரியும். பதிவுலகத்தில் தனக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளாத பதிவர்களே இல்லை (புதியவர்களைத் தவிர). சில நட்பு வட்டங்கள் போரம்களை ஆரம்பித்து கருத்துப் பறிமாற்றத்திலும் ஈடுபடுகின்றன என்பதையும் காண்கிறோம்..

அவர்  சொன்னது போல, குழு அமைத்துக் கொண்டு ஓட்டுப் போட்டால், அந்தக் குழுவினர் அனைவரின் பதிவுகளும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையிலான ஓட்டுகளைத் தான் பெற்றிருக்க வேண்டும். பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? மேலும் அப்படிச் செய்தால், தினமும் தமிழ்மணம் மகுடத்தில் அவர்கள் பதிவுகள் மட்டும்தான் வரும். அப்படியா நடந்து கொண்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு பதிவரிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அவரிடமே தனி மெயிலில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாமே? மெயில் இல்லையென்றால், நண்பர்களிடம் சொல்லலாம், அதைவிடுத்து பதிவில் போடுவது, தெருவில் இறங்கி குழாயடிச் சண்டை போடுவதற்கு ஒப்பானது. முதலில் அவை நாகரிகத்தை பழகுங்கள், பின்பு மகுடம் ஏறலாம். உங்கள் போட்டியை பதிவுகளின் தரத்தில் காட்டுங்கள். வார்த்தைகளில் அல்ல.

நண்பர்களிடம் தனது பதிவின் லிங்கைக் கொடுத்து படிக்கச் சொல்வதில் தப்பில்லை. ஆனால் மெயிலிலோ சாட்டிலோ சென்று ஓட்டுப்போடுங்கள் என்று சொல்வது சற்று எல்லை மீறுவதாகவே எனக்குப் படுகிறது. பிடித்திருந்தால் அவர்களே போடட்டுமே. நண்பர்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு எல்லாப் பதிவுகளுக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான போக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் தமிழ்மணத்தின் வாராந்திர தரவரிசையே என்றால் அது மிகையல்ல.

தமிழ்மண வாராந்திர தரவரிசையை வைத்துக் கொண்டு பதிவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெகுபிரபலமாக உள்ள பதிவர்கள் சிலர்,  சினிமாவில் கால்பதிக்க முயன்று கொண்டிருப்பதை அறிவோம். அவர்கள் பிரபல பதிவர்கள் என்பதற்காக வாய்ப்புகள் அவர்கள் கைகளில் தூக்கி வைக்கப்பட்டனவா? இல்லையே? இது அவர்கள் முயற்சியையோ, திறமையையோ ஏளனப்படுத்துவதற்காக அல்ல, பதிவர்களின் பிரபல்யத்தின் சந்தை மதிப்பை சொல்வதற்காகவே. நட்புகளின் மூலமாக ஒருசில அனுகூலங்கள் கிடத்திருக்கலாம். ஆனால் திறமையே ஒருவரை உயர வைக்கும்.

இந்தத் தரவரிசைகள், ஓட்டுகள், ஹிட்டுகள் எல்லாமே மெய்மறக்கச் செய்யும் போதையைப் போன்றவை. அதில் சிக்கிக் கொண்டால் தேவையில்லாத நேரவிரயமும், மன உளைச்சலுமே மிச்சம். தரவரிசைகளுக்காக குப்பை கூளங்களைப் போல எழுதித் தள்ளுகிறார்களே, அதை அவர்களாலேயே மீண்டும் ஒருமுறை படிக்க முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஹிட்டுகளுக்காக இன்று தினம் மூன்று முதல் நான்கு பதிவுகள் போடும் பதிவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் உழைப்பையும் திறமையயும் குறைத்து மதிப்பிடவோ அல்லது ஒருவர் ஒரு நாளைக்கு இத்தனை பதிவுதான் போடவேண்டும் என்று சொல்லவோ நான் முயலவில்லை. வாராந்திர தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை அவர்கள் தான் அலங்கரிக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதையே மற்றவர்களும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் போக்கு சரியானதாக தோன்றவில்லை.


கூகிளின் ஈடு இணையற்ற வசதியான இந்த ப்ளாக்கர் இன்று நம்மில் பலரை எழுத்தாளர்கள் ஆக்கியுள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்துவோம். உங்களுக்குத் தோன்றுவதை உங்கள் தனித்தன்மையோடு எழுத முயலுங்கள். அடுத்தவரை காயப்படுத்தாதீர்கள், அடுத்தவர்களின் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்ததீர்கள்.  யார் வேண்டுமென்றாலும், என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம் என்பதே பதிவுகளின் சிறப்பு, அதை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்.

Wednesday, January 26, 2011

உலகக்கோப்பை கிரிக்கெட்: எனக்கு வந்த அதிர்ச்சி யோசனை!




தினமும் கண்ட கண்ட செய்திகளைப் படித்து படித்து இப்போ மூளையே மழுங்கி விட்டது. எது நடந்தாலும் நமக்கு ஒண்ணும் ஆகலேன்னா பரவாயில்லைன்னு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். எதைப் பற்றித்தான் கவலைப்படுவது? இந்த அரசியல் கட்சிகள் தந்திரமாக மக்களை ஏதாவது ஒரு கவலையிலேயே வைத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் சில தினங்கள் முன்பு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த போது தோன்றிய ஒரு விபரீதமான யோசனை. அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வில்லங்கமான திட்டம் அது. எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.

சமீபகாலமாக மத்திய அரசு அன்றாடம் ஒரு பிரச்சனையைச் சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது.  ஸ்பெக்ட்ரம், விலைவாசி, வெங்காயம், பெட்ரோல், ஸ்விங் வங்கி கணக்குகள் என்று அரசிற்கு ஏகத்திற்கும்  கெட்ட பெயர் வந்துவிட்டது. சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து மக்கள் எல்லாப் பிரச்சனைகளையும் மறந்துவிடமாட்டார்களா என்று பார்ஹ்ட்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வென்று விட்டால் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்தானே? அப்போ அரசே ”முயன்று” நமது அணிக்கு கோப்பை கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டால் பிரச்சனைகள் (தற்காலிகமாவாவது) மறக்கப்பட்டு விடுமல்லவா? இதுதான் அய்யா எனக்கு ஏற்பட்ட அந்த வில்லங்கமான யோசனை!

உண்மையிலேயே அப்படி நடந்தாலும் நடக்கலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எல்லார் காதிலும் சும்மா போட்டு வைக்கிறேன். ஒருவேளை அப்படியே நடந்துவிட்டால் சும்மா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காமல், நமது அணியைப் பாராட்டி உங்கள் தேசபக்திக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

Saturday, January 22, 2011

என்னவெல்லாம் நடக்குது?



விவசாயத்தை ஊக்கப்படுத்த பா.ம. க ஆட்சிக்கு வர வேண்டுமாம், அதன் நிறுவனர் ராமதாசு சொல்லி இருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், பா.ம.க ஆட்சிக்கு வருவதெல்லாம் உடனே நடக்கக் கூடிய காரியமா? ஆட்சிக்கு வந்தால்தான் இவர்கள் விவசாயத்தை ஊக்கப்படுத்துவார்களா? திமுக ஆட்சிக்கு வந்த புதுசுல பாமக, கூட்டணிக் கட்சியாத்தானே இருந்தாங்க, அப்போ ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து விவசாயத்த ஊக்கப்படுத்தி இருக்கலாமே? அரசு சென்னைக்கருகே துணைநகர திட்டம் கொண்டுவர முயன்ற போது, எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்து அதை நிறுத்தினார்கள். தங்களுக்கு நெருக்கமான பணமுதலைகள் பாதிக்கப்படக் கூடும் என்று அக்கறைதானே அவர்களை அப்படி ஆட்டுவித்தது? அதே அக்கறையை விவசாயதிற்கும் காட்டலாமே?

இவர்கள் உண்மையிலேயே விவசாயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், தைலாபுரத்தில் தனக்கு மட்டும் செய்து வரும் இயற்கை விவசாயத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தி மாநில அளவில் பரப்ப முயற்சிக்கலாம். மகனுக்கு மந்திரி பதவி வாங்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளில், ஒரு சதவீத முயற்சியை இதற்கு செய்தால் போதும் விவசாயத்திற்கு எவ்வளவோ நன்மை நடக்கும். அதே நேரம், சில விஷயங்களை அரசுதான் செய்ய முடியும். எப்படியோ விவசாயத்தைப் பற்றி தேர்தல் நேரத்திலாவது பேசிய ராமதாசுக்கு நன்றியைக் கூறுவோம்.

திமுக அரசுக்கு தேர்தல் நேரத்துல கெட்ட பெயர் வந்துடகூடாதுன்னு பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு கடினமாக இல்லாமல் வினாத்தாள் தயாரிக்கும் படி அரசு உத்தரவிட்டு இருக்கிறதாம். முதலில் அரசு மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்யட்டும். மாணவர்கள், பெற்றோர்கள் ஆதரவு தானாகக் கிடைக்கும். ஓட்டு இல்லாத மாணவர்களுக்கே இப்படி என்றால், பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்திருந்தால்? நல்லவேளை ஓட்டுரிமை வைத்துள்ள கல்லூரி மாணவர்கள், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. இருந்திர்ருந்தால் இன்னும் என்னென்ன கூத்துக்களெல்லாம் நடந்திருக்குமோ?

கவர்னர் முடிவை எதிர்த்து, கர்னாடக அரசு பந்த் நடத்துகிறதாம். அதுவும் எப்படி? கர்னாடக மக்களிடம் கவுரவத்தை இழந்த கவர்னரை எதிர்த்தாம். இதுவரைக்கும் 30 பஸ்சைக் கொளுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, காங்கிரசுக்குச் சரியான மாற்று நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன்? ஒரு மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதை மறுப்பதற்கில்லை. பாவம் அவர்களும் எவ்வளவு நாள் எதிர்கட்சியாகவே இருந்துவிட்டார்கள், இப்பொழுதுதான் ஒரு அரிதான சந்தர்ப்பம் கிடத்திருக்கின்றது, கொஞ்சம் சம்பாரித்துக் கொள்ளட்டுமே?

மத்திய அமைச்சர் கபில்சிபல், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை விமர்சித்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கபில்சிபல் அப்படி என்ன கூறிவிட்டார்? தவறிழைத்தவர்கள் என்றைக்கு ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள்?  சரி அவருக்குதான் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை பற்றி கருத்துக் கூறக் கூடாது என்று தெரியாதாமே? அந்தப் பணத்தை அடிச்சவங்களையே ஒண்ணும் பண்ணப் போறதில்லை, பாவம் இவரு,போனாப் போகுதுன்னு மன்னிச்சு விட்ரலாமே? 

Friday, January 21, 2011

என்ன வேணும் உங்களுக்கு?


ஈரோட்ல, கள் இறக்கும் போராட்டம் நடத்தி இருக்காங்களாம். நாடு எங்கே போகுது? மதுவிலக்கு வேணும்னு போராட்டம் நடத்துன காலம் போய் இப்போ கள் இறக்குவோம்னு போராடுற வரைக்கும் வந்திருக்கு. இதே ஈரோட்ல தான் பெரியார், மதுவிலக்குக்காக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போ கள் இறக்கியே ஆகுவோம் என்று போராடுறாங்க. என்ன அவலம் இது? பிழைப்புக்கு வழியில்லேன்னா எது வேணுமென்றாலும் பண்ணலாமா?

கஞ்சா நல்ல விலைக்குப் போகும் என்பதற்காக இனி விவசாயிகள் கஞ்சா பயிர் செய்வோம் என்று போராடுவாங்களா? மதுக்கடைக்ளை மூடச் சொல்லி போராடினால் கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா அதற்குப் போட்டியாக நாங்களும் மது இறக்குவோம் என்றால் எப்படி? அரசாங்கத்திற்குத்தான் சமுதாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்றால், மக்களுக்கும் கூடவா சுரணை இல்லை? நாட்டில் மக்களுக்கு எவ்வளவு எவ்வளவு பிரச்சனைகள்? விலைவாசி, பாதுகாப்பின்மை என்று அன்றாட வாழ்க்கையே அவலமாகி வரும் போது கள் இறக்குகிறார்களாம் கள்!

இப்போ டிவில அடிக்கடி வரும் செய்தி நடிகை வனிதாவின் மகன் யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான். அதைப்பற்றி நமக்கென்ன? வனிதாவின் மகன் யாரிடம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் குடும்பத்தினர் தான் கவலைப்பட வேண்டுமே தவிர மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதெல்லாம் ஒரு செய்தியா? இந்த டீவிகளுக்கு வேறு செய்தியே கிடைக்கவில்லையா?  இதை வேறு நாள் முழுதும் அரை மணிக்கொரு தரம் செய்திகளில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், விவஸ்தை கெட்ட டிவிக்கள்.  அந்த அம்மையார், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடப்போகிறாராம். எது எதற்கெல்லாம் அரசியல் என்று பாருங்கள். கேவலங்களின் உச்ச கட்டத்தை நோக்கி நமது சமூகம் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. வேறு என்ன சொல்வது?

சிவகாசி அருகே மறுபடியும் ஒரு பட்டாசு தொழிற்சாலை விபத்து. தெரியாமல் தான் கேட்கிறேன், ஏன்யா வேறு தொழிலே இல்லையா? இப்படி நாளும் பொழுதும் ஆபத்தான வெடிமருந்தோடு விளையாடும் இந்த தொழில் நமக்குத் தேவையா? எவ்வளவுதான் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து வைத்தாலும் வெடிமருந்து வெடிமருந்துதானே? நமது சில நிமிட சந்தோசத்திற்காக சிலர் ஆயுள் முழுதும் ஆபத்தான தொழிலில் ஈடுபட வேண்டுமா? அப்படிஒரு அத்தியாவசியமான பொருளா அது? சிந்திப்போம் மக்களே! பட்டாசுகளைப் புறக்கணியுங்கள்.. மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாட வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே!

Photo courtesy: Dinamalar

Thursday, January 20, 2011

வாங்கடா வாங்க...

விஜயகாந்த் சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்குப் போடுகிறார்: செய்தி!
அது என்ன, தற்காலிகமா முழுக்குப் போடுறது? ஒரேடியா முழுக்குப் போட்டுத் தொலைய வேணடியதுதானே? அதுவே அவரை விட்டாப் போதும்னுதான் இருக்கு, இந்த லட்சணத்துல இவரு தற்காலிகமா நிறுத்தி வைக்கிறாராம். ஒழுங்கா அரசியல்ல கவனம் செலுத்தி, உருப்படியா ஏதாவது பண்றதுக்கு வழியக் காணோம், இதெல்லாம் தேவையா? தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இந்த சினிமா பைத்தியம் எப்போ தெளியப் போகுதோ? 

டீவி, பத்திரிக்கை, பேப்பர், அரசியல்னு எல்லாப் பக்கத்துலேயும் இருந்த இந்த சினிமா இப்போ பதிவுகளுக்குள்ளேயும்! ஆமா, தெரிஞ்சத தானே எழுதுவாங்க. நம்ம மக்களுக்கு சினிமாவைத் தவிர வேற என்ன எழவு தெரியும்? எதுக்கெடுத்தாலும் சினிமா, எங்கே போனாலும் சினிமா! தமிழர்கள் ரெண்டு பேரு சந்திச்சுக்கிட்டாங்கன்னா, மூணாவது நிமிசமே பேச்சு சினிமாவுக்குப் போயிடும். ஏன்யா உலகத்தில வேற ஏதுவுமே இல்லையா? 

கொசுறுச் செய்தி:
விஜயக் காந்தின் மகன் பிரபாகரன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க விருப்பம்: 

இந்தச் செய்தியப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல. அப்புறம் உரிமை, சுதந்திரம், மசுருன்னு கிளம்பிடுவானுங்க.