Wednesday, January 26, 2011

உலகக்கோப்பை கிரிக்கெட்: எனக்கு வந்த அதிர்ச்சி யோசனை!
தினமும் கண்ட கண்ட செய்திகளைப் படித்து படித்து இப்போ மூளையே மழுங்கி விட்டது. எது நடந்தாலும் நமக்கு ஒண்ணும் ஆகலேன்னா பரவாயில்லைன்னு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். எதைப் பற்றித்தான் கவலைப்படுவது? இந்த அரசியல் கட்சிகள் தந்திரமாக மக்களை ஏதாவது ஒரு கவலையிலேயே வைத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் சில தினங்கள் முன்பு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த போது தோன்றிய ஒரு விபரீதமான யோசனை. அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வில்லங்கமான திட்டம் அது. எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.

சமீபகாலமாக மத்திய அரசு அன்றாடம் ஒரு பிரச்சனையைச் சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது.  ஸ்பெக்ட்ரம், விலைவாசி, வெங்காயம், பெட்ரோல், ஸ்விங் வங்கி கணக்குகள் என்று அரசிற்கு ஏகத்திற்கும்  கெட்ட பெயர் வந்துவிட்டது. சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து மக்கள் எல்லாப் பிரச்சனைகளையும் மறந்துவிடமாட்டார்களா என்று பார்ஹ்ட்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வென்று விட்டால் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்தானே? அப்போ அரசே ”முயன்று” நமது அணிக்கு கோப்பை கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டால் பிரச்சனைகள் (தற்காலிகமாவாவது) மறக்கப்பட்டு விடுமல்லவா? இதுதான் அய்யா எனக்கு ஏற்பட்ட அந்த வில்லங்கமான யோசனை!

உண்மையிலேயே அப்படி நடந்தாலும் நடக்கலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எல்லார் காதிலும் சும்மா போட்டு வைக்கிறேன். ஒருவேளை அப்படியே நடந்துவிட்டால் சும்மா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காமல், நமது அணியைப் பாராட்டி உங்கள் தேசபக்திக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

Saturday, January 22, 2011

என்னவெல்லாம் நடக்குது?விவசாயத்தை ஊக்கப்படுத்த பா.ம. க ஆட்சிக்கு வர வேண்டுமாம், அதன் நிறுவனர் ராமதாசு சொல்லி இருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், பா.ம.க ஆட்சிக்கு வருவதெல்லாம் உடனே நடக்கக் கூடிய காரியமா? ஆட்சிக்கு வந்தால்தான் இவர்கள் விவசாயத்தை ஊக்கப்படுத்துவார்களா? திமுக ஆட்சிக்கு வந்த புதுசுல பாமக, கூட்டணிக் கட்சியாத்தானே இருந்தாங்க, அப்போ ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து விவசாயத்த ஊக்கப்படுத்தி இருக்கலாமே? அரசு சென்னைக்கருகே துணைநகர திட்டம் கொண்டுவர முயன்ற போது, எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்து அதை நிறுத்தினார்கள். தங்களுக்கு நெருக்கமான பணமுதலைகள் பாதிக்கப்படக் கூடும் என்று அக்கறைதானே அவர்களை அப்படி ஆட்டுவித்தது? அதே அக்கறையை விவசாயதிற்கும் காட்டலாமே?

இவர்கள் உண்மையிலேயே விவசாயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், தைலாபுரத்தில் தனக்கு மட்டும் செய்து வரும் இயற்கை விவசாயத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தி மாநில அளவில் பரப்ப முயற்சிக்கலாம். மகனுக்கு மந்திரி பதவி வாங்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளில், ஒரு சதவீத முயற்சியை இதற்கு செய்தால் போதும் விவசாயத்திற்கு எவ்வளவோ நன்மை நடக்கும். அதே நேரம், சில விஷயங்களை அரசுதான் செய்ய முடியும். எப்படியோ விவசாயத்தைப் பற்றி தேர்தல் நேரத்திலாவது பேசிய ராமதாசுக்கு நன்றியைக் கூறுவோம்.

திமுக அரசுக்கு தேர்தல் நேரத்துல கெட்ட பெயர் வந்துடகூடாதுன்னு பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு கடினமாக இல்லாமல் வினாத்தாள் தயாரிக்கும் படி அரசு உத்தரவிட்டு இருக்கிறதாம். முதலில் அரசு மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்யட்டும். மாணவர்கள், பெற்றோர்கள் ஆதரவு தானாகக் கிடைக்கும். ஓட்டு இல்லாத மாணவர்களுக்கே இப்படி என்றால், பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்திருந்தால்? நல்லவேளை ஓட்டுரிமை வைத்துள்ள கல்லூரி மாணவர்கள், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. இருந்திர்ருந்தால் இன்னும் என்னென்ன கூத்துக்களெல்லாம் நடந்திருக்குமோ?

கவர்னர் முடிவை எதிர்த்து, கர்னாடக அரசு பந்த் நடத்துகிறதாம். அதுவும் எப்படி? கர்னாடக மக்களிடம் கவுரவத்தை இழந்த கவர்னரை எதிர்த்தாம். இதுவரைக்கும் 30 பஸ்சைக் கொளுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, காங்கிரசுக்குச் சரியான மாற்று நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன்? ஒரு மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதை மறுப்பதற்கில்லை. பாவம் அவர்களும் எவ்வளவு நாள் எதிர்கட்சியாகவே இருந்துவிட்டார்கள், இப்பொழுதுதான் ஒரு அரிதான சந்தர்ப்பம் கிடத்திருக்கின்றது, கொஞ்சம் சம்பாரித்துக் கொள்ளட்டுமே?

மத்திய அமைச்சர் கபில்சிபல், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை விமர்சித்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கபில்சிபல் அப்படி என்ன கூறிவிட்டார்? தவறிழைத்தவர்கள் என்றைக்கு ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள்?  சரி அவருக்குதான் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை பற்றி கருத்துக் கூறக் கூடாது என்று தெரியாதாமே? அந்தப் பணத்தை அடிச்சவங்களையே ஒண்ணும் பண்ணப் போறதில்லை, பாவம் இவரு,போனாப் போகுதுன்னு மன்னிச்சு விட்ரலாமே? 

Friday, January 21, 2011

என்ன வேணும் உங்களுக்கு?


ஈரோட்ல, கள் இறக்கும் போராட்டம் நடத்தி இருக்காங்களாம். நாடு எங்கே போகுது? மதுவிலக்கு வேணும்னு போராட்டம் நடத்துன காலம் போய் இப்போ கள் இறக்குவோம்னு போராடுற வரைக்கும் வந்திருக்கு. இதே ஈரோட்ல தான் பெரியார், மதுவிலக்குக்காக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போ கள் இறக்கியே ஆகுவோம் என்று போராடுறாங்க. என்ன அவலம் இது? பிழைப்புக்கு வழியில்லேன்னா எது வேணுமென்றாலும் பண்ணலாமா?

கஞ்சா நல்ல விலைக்குப் போகும் என்பதற்காக இனி விவசாயிகள் கஞ்சா பயிர் செய்வோம் என்று போராடுவாங்களா? மதுக்கடைக்ளை மூடச் சொல்லி போராடினால் கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா அதற்குப் போட்டியாக நாங்களும் மது இறக்குவோம் என்றால் எப்படி? அரசாங்கத்திற்குத்தான் சமுதாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்றால், மக்களுக்கும் கூடவா சுரணை இல்லை? நாட்டில் மக்களுக்கு எவ்வளவு எவ்வளவு பிரச்சனைகள்? விலைவாசி, பாதுகாப்பின்மை என்று அன்றாட வாழ்க்கையே அவலமாகி வரும் போது கள் இறக்குகிறார்களாம் கள்!

இப்போ டிவில அடிக்கடி வரும் செய்தி நடிகை வனிதாவின் மகன் யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான். அதைப்பற்றி நமக்கென்ன? வனிதாவின் மகன் யாரிடம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் குடும்பத்தினர் தான் கவலைப்பட வேண்டுமே தவிர மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதெல்லாம் ஒரு செய்தியா? இந்த டீவிகளுக்கு வேறு செய்தியே கிடைக்கவில்லையா?  இதை வேறு நாள் முழுதும் அரை மணிக்கொரு தரம் செய்திகளில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், விவஸ்தை கெட்ட டிவிக்கள்.  அந்த அம்மையார், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடப்போகிறாராம். எது எதற்கெல்லாம் அரசியல் என்று பாருங்கள். கேவலங்களின் உச்ச கட்டத்தை நோக்கி நமது சமூகம் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. வேறு என்ன சொல்வது?

சிவகாசி அருகே மறுபடியும் ஒரு பட்டாசு தொழிற்சாலை விபத்து. தெரியாமல் தான் கேட்கிறேன், ஏன்யா வேறு தொழிலே இல்லையா? இப்படி நாளும் பொழுதும் ஆபத்தான வெடிமருந்தோடு விளையாடும் இந்த தொழில் நமக்குத் தேவையா? எவ்வளவுதான் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து வைத்தாலும் வெடிமருந்து வெடிமருந்துதானே? நமது சில நிமிட சந்தோசத்திற்காக சிலர் ஆயுள் முழுதும் ஆபத்தான தொழிலில் ஈடுபட வேண்டுமா? அப்படிஒரு அத்தியாவசியமான பொருளா அது? சிந்திப்போம் மக்களே! பட்டாசுகளைப் புறக்கணியுங்கள்.. மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாட வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே!

Photo courtesy: Dinamalar

Thursday, January 20, 2011

வாங்கடா வாங்க...

விஜயகாந்த் சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்குப் போடுகிறார்: செய்தி!
அது என்ன, தற்காலிகமா முழுக்குப் போடுறது? ஒரேடியா முழுக்குப் போட்டுத் தொலைய வேணடியதுதானே? அதுவே அவரை விட்டாப் போதும்னுதான் இருக்கு, இந்த லட்சணத்துல இவரு தற்காலிகமா நிறுத்தி வைக்கிறாராம். ஒழுங்கா அரசியல்ல கவனம் செலுத்தி, உருப்படியா ஏதாவது பண்றதுக்கு வழியக் காணோம், இதெல்லாம் தேவையா? தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இந்த சினிமா பைத்தியம் எப்போ தெளியப் போகுதோ? 

டீவி, பத்திரிக்கை, பேப்பர், அரசியல்னு எல்லாப் பக்கத்துலேயும் இருந்த இந்த சினிமா இப்போ பதிவுகளுக்குள்ளேயும்! ஆமா, தெரிஞ்சத தானே எழுதுவாங்க. நம்ம மக்களுக்கு சினிமாவைத் தவிர வேற என்ன எழவு தெரியும்? எதுக்கெடுத்தாலும் சினிமா, எங்கே போனாலும் சினிமா! தமிழர்கள் ரெண்டு பேரு சந்திச்சுக்கிட்டாங்கன்னா, மூணாவது நிமிசமே பேச்சு சினிமாவுக்குப் போயிடும். ஏன்யா உலகத்தில வேற ஏதுவுமே இல்லையா? 

கொசுறுச் செய்தி:
விஜயக் காந்தின் மகன் பிரபாகரன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க விருப்பம்: 

இந்தச் செய்தியப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல. அப்புறம் உரிமை, சுதந்திரம், மசுருன்னு கிளம்பிடுவானுங்க.