Friday, January 21, 2011

என்ன வேணும் உங்களுக்கு?


ஈரோட்ல, கள் இறக்கும் போராட்டம் நடத்தி இருக்காங்களாம். நாடு எங்கே போகுது? மதுவிலக்கு வேணும்னு போராட்டம் நடத்துன காலம் போய் இப்போ கள் இறக்குவோம்னு போராடுற வரைக்கும் வந்திருக்கு. இதே ஈரோட்ல தான் பெரியார், மதுவிலக்குக்காக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போ கள் இறக்கியே ஆகுவோம் என்று போராடுறாங்க. என்ன அவலம் இது? பிழைப்புக்கு வழியில்லேன்னா எது வேணுமென்றாலும் பண்ணலாமா?

கஞ்சா நல்ல விலைக்குப் போகும் என்பதற்காக இனி விவசாயிகள் கஞ்சா பயிர் செய்வோம் என்று போராடுவாங்களா? மதுக்கடைக்ளை மூடச் சொல்லி போராடினால் கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா அதற்குப் போட்டியாக நாங்களும் மது இறக்குவோம் என்றால் எப்படி? அரசாங்கத்திற்குத்தான் சமுதாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்றால், மக்களுக்கும் கூடவா சுரணை இல்லை? நாட்டில் மக்களுக்கு எவ்வளவு எவ்வளவு பிரச்சனைகள்? விலைவாசி, பாதுகாப்பின்மை என்று அன்றாட வாழ்க்கையே அவலமாகி வரும் போது கள் இறக்குகிறார்களாம் கள்!

இப்போ டிவில அடிக்கடி வரும் செய்தி நடிகை வனிதாவின் மகன் யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான். அதைப்பற்றி நமக்கென்ன? வனிதாவின் மகன் யாரிடம் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் குடும்பத்தினர் தான் கவலைப்பட வேண்டுமே தவிர மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதெல்லாம் ஒரு செய்தியா? இந்த டீவிகளுக்கு வேறு செய்தியே கிடைக்கவில்லையா?  இதை வேறு நாள் முழுதும் அரை மணிக்கொரு தரம் செய்திகளில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், விவஸ்தை கெட்ட டிவிக்கள்.  அந்த அம்மையார், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடப்போகிறாராம். எது எதற்கெல்லாம் அரசியல் என்று பாருங்கள். கேவலங்களின் உச்ச கட்டத்தை நோக்கி நமது சமூகம் வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. வேறு என்ன சொல்வது?

சிவகாசி அருகே மறுபடியும் ஒரு பட்டாசு தொழிற்சாலை விபத்து. தெரியாமல் தான் கேட்கிறேன், ஏன்யா வேறு தொழிலே இல்லையா? இப்படி நாளும் பொழுதும் ஆபத்தான வெடிமருந்தோடு விளையாடும் இந்த தொழில் நமக்குத் தேவையா? எவ்வளவுதான் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து வைத்தாலும் வெடிமருந்து வெடிமருந்துதானே? நமது சில நிமிட சந்தோசத்திற்காக சிலர் ஆயுள் முழுதும் ஆபத்தான தொழிலில் ஈடுபட வேண்டுமா? அப்படிஒரு அத்தியாவசியமான பொருளா அது? சிந்திப்போம் மக்களே! பட்டாசுகளைப் புறக்கணியுங்கள்.. மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாட வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே!

Photo courtesy: Dinamalar

No comments:

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!