Monday, September 19, 2011

கூடங்குளம் போராட்டத்தின் நோக்கம் சரியானதுதானா?

பதிவர் கூடல் பாலா அவர்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே கலந்து வருவதுடன், அதுகுறித்த விழிப்புணர்வு பதிவுகளும் வெளியிட்டு வருகிறார். தற்போது உண்ணாவிரதமும் இருந்துவரும்  அவரை பாராட்டும் இன்னேரத்தில் போராட்டத்திற்கான காரணங்களாய் அவர் குறிப்பிட்டிருந்தவற்றில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அனைவர் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன். இது குறித்து உணர்ச்சிவயப்பட்டு எதிர்குரல் எழுப்பாமல், சிந்தித்து செயல்பட்டால் மகிழ்வேன்.
 
 
1) கூடங்குளம் அணு உலையானது மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது .பொதுவாக இது போன்ற பெரிய அணு உலைகள் அமையும் பகுதியிலிருந்து 16  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மிகக் குறைவான மக்கள் தொகையே இருக்கவேண்டும்.மாறாக இங்கு 16 கிலோ மீட்டருக்குள் 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கிறார்கள் .அணு உலை நல்ல நிலையில்  இயங்கினால்கூட இவர்களுக்கு பல்வேறு குணமாக்க முடியாத நோய்கள் ஏற்படும் .
 
 
கூடங்குளம் அணு மின் திட்டம் 20 வருடங்களுக்கு முன் திட்டமிடப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாக பணி நடந்து வருகிறது.  அப்போதெல்லாம் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இப்படி போராடுவது சரியா? கல்பாக்கத்தில் மக்கள் இல்லையா?

 
2 ) சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்ததைப் போலொரு விபத்து கூடங்குளத்தில் நிகழுமாயின் அணு உலையைச்சுற்றி 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் 10  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் 24  மணி நேரத்திற்குள் வெளியேற்றப் படவேண்டும் .இது முற்றிலும் சாத்தியமில்லாதது.
 
 
இதற்கு அரசுதான் ஏற்பாடுகள் செய்யவேண்டும். போராட்டங்கள் மூலம் சரியான ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தலாம். ஜப்பானில் எப்படி சாத்தியமானது? மற்ற நாடுகள் என்ன செய்திருக்கின்றன? நம் நாட்டிலேயே மற்ற அணு உலைகளில் என்ன ஏற்பாடு வைத்திருக்கிறார்கள்?
 
3)முக்கியமான இன்னொரு காரணம் தரமற்ற கட்டுமானம் .இதைப் பற்றி விளக்கமாக அறிய கூடங்குளம் அணு உலை பில்டிங் வீக் என்ற இப்பதிவை வாசிக்கவும் .
 
 
தரமற்ற கட்டுமானம் என்று நாம் சொல்வது ஆதாரமற்றது. அதுகுறித்த புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஒருவேளை எதுவும் இருந்தால் சொல்லுங்கள். இந்தியாவிலேயே கட்டபட்ட கல்பாக்கம் அணு உலைகள் செம்மையாக இயங்கி வருகின்றன.
 

4) உக்ரைனின் செர்நோபில் விபத்து போல விபத்து நிகழுமாயின் தமிழகம் மற்றும் வடக்கு இலங்கையில் வசிக்கும் ஒட்டு மொத்த தமிழினமே அழியும் . 


இது உலகத்தில் உள்ள, இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளுக்கும் பொருந்துமே?


5) அணு உலையிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் கலந்த நீர் கடலில் கலக்கப் படுவதால் கடல் வளங்கள் அழியும் .
 
இதுவும் பொதுவான காரணம்தான்.
6) அணு உலையின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மண்ணுக்கடியில் புதைக்கப் படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் .மேலும் இவற்றை 24000  ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க படவேண்டும் .
 
பொதுவான காரணம்.
7 ) அணு உலைகள் கடற்கரையில் கடல்மட்டத்திலிருந்து வெறும் 7  மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளதால் எளிதில் சுனாமி தாக்கும் ஆபத்து உள்ளது .சமீபத்தில் ஃபுகுஷிமா அணு உலைகளை 20  மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கியது நினைவுகூறத் தக்கது .
 
கல்பாக்கம் அணு உலை சுனாமியை தாங்கி நின்றது நினைவிருக்கலாம். மேலும் அப்போது தென் தமிழக கடற்கரை பகுதியை சுனாமி தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8 )தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளுக்கு முக்கிய இலக்கு அணு உலைகள். இலங்கையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது .

இதுவும் பொதுவான காரணமே.



ஆக  கூடங்குளம் அணு உலையை மூட சொல்வதற்கு சரியான காரணங்கள் ஏதுவும் இல்லை, தரமற்ற கட்டுமானம் என்பதை தவிர (அதுவும் நிருபிக்கப்படதா தகவலே). போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணு உலைதான் நாட்டின் முதல் அணு மின்நிலைய போல நடந்துகொள்வது சரியல்ல.

அணு உலைகளோ, ஆயுதங்களோ வேண்டாம் என்பதே எமது கருத்து. நாட்டில் இருக்கு்ம் அனைத்து அணு உலைகளுக்கும் போதிய தற்காப்பு நடவடிக்கைகள், ஆய்வுகள், அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ள படவேண்டும். படிப்படியாக அணு உலைகளின் பயன்பாட்டை குறைத்து, அறவே இல்லாமல் ஆக்க வேண்டும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து தொடங்குவதற்கு தயாராக இருக்கும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சொல்வது தவறானது. சாத்தியமற்றது.

சரியா தவறா, காரணங்கள் என்ன என்று எதையும் சிந்திக்காமல் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்பட்டு கூக்குரலிடுவதே நமது குணமாகி வருகிறது. பண்பட்ட முதிர்ச்சியான சமுதாயமாக நாம் மாறுவதற்கு இன்னும் பல நூற்றாண்டுகளாகும் போலிருக்கிறது.

1 comment:

இருதயம் said...

மிக சரியான பகிர்வு . தங்களை போன்ற பதிவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்து கொண்டு வர வேண்டும்

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!